பாகூர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்
பாகூர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாகூர், நவ.
பாகூர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தொடர் மழை
பாகூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும், நிலங்களிலும் மழை நீர் சூழ்ந்து வீடுகளின் சுவர்கள் வலுவிழந்து காணப்படுகின்றன.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோரம் உள்ள சோரியாங்குப்பத்தில் இடிந்தும், தரைத்தளம் இறங்கியும் 9 வீடுகள் சேதமடைந்தன.
சுவர் இடிந்து விழுந்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. குருவிநத்தத்தை சேர்ந்த செந்தில்குமார், குடும்பத்துடன் தனது குடிசை வீட்டில் படுத்திருந்தார். நள்ளிரவில் திடீரென்று வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த செந்தில்குமார், அவரது தாய், மனைவி, பிள்ளைகள் என 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சேலியமேடு ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த துளசிதாஸ் என்பவரின் குடிசை வீட்டின் ஒரு பக்க சுவரும் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது. சுவர் விழுந்து அமுக்கியதில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படவில்லை.
கணக்கெடுப்பு நடத்தவேண்டும்
இதேபோல் பாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story