நீர்பிடிப்பு பகுதியில் வெளுத்து வாங்கிய மழை: வீராணம் ஏரியில் 2400 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
நீர்பிடிப்பு பகுதியில் வெளுத்து வாங்கிய மழையின் காரணமாக, வீராணம் ஏரியில் இருந்து 2400 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இதன் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலம் 44ஆயிரத்து, 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. இது தவிர்த்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு.
காவிரியின் கடைமடை பகுதியில் இருக்கும் இந்த ஏரிக்கு, கொள்ளிடத்தின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவதுண்டு.
இதுதவிர ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடைவழியாக வும் தண்ணீர் வரத்து இருக்கும்.
தற்போது வடவாறு வழியாக தண்ணீர் வரத்து இல்லை.ஆனால் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழயைால் ஏரிக்கு குறைந்த அளவில் தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் ஏரி நீர்மட்டம் 44.50 அடியை எட்டியது. வழக்கமாக மழைக்காலங்களில் 45 அடிக்கு மிகாமல் பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
வெளுத்து வாங்கிய மழை
அந்த வகையில், முன்னெச்சரிக்கையாக ஏரியில் உருத்திர சோலை ஜீரோ பாயிண்ட் மதகு வழியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும், சேத்தியாதோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 100 கனஅடி தண்ணீரும் ஏற்கனவே திறக்கப்பட்டது.
இதற்கிடையே ஏரி நீர்பிடிப்பு பகுதியான ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
உபரிநீர் வெளியேற்றம்
இதனால், செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங் குழி ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதாவது நேற்று முன்தினம் ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 500 அடியாக அதிகரித்தது. இதனால் ஏரி நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு 45.40 அடியாக எட்டியது.
இதை தொர்டர்ந்து நேற்று காலை முதல் லால்பேட்டை வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேபோல் சேத்தியாதோப்பு வி.என்.எஸ். மதகின் வழியாக நீர் திறப்பானது வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டது.
அதாவது ஏரியில் இருந்து மொத்தம் 2400 கனஅடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகவினாடிக்கு 60 கன அடி தண்ணீரும் அனுப்பப்பட்டு வருகிறது.
25 கிராமங்கள் பாதிக்கும்
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தால், ஏரிக்கு இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிரிக்க கூடும். இதனால் வெள்ளியங்கால் ஓடையை சுற்றிலும் அமைந்துள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழும் அபாயம் உள்ளது.
இதை தவிர்த்து காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதியில் உள்ள தெருக்களில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.
Related Tags :
Next Story