நாகை, மயிலாடுதுறை மீனவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்


நாகை, மயிலாடுதுறை மீனவர்கள் சொந்த ஊருக்கு வந்தனர்
x
தினத்தந்தி 27 Nov 2021 5:06 PM GMT (Updated: 27 Nov 2021 5:06 PM GMT)

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட நாகை, மயிலாடுதுறை மீனவர்கள் 18 பேர் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். அவர்களை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

வெளிப்பாளையம்:
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட நாகை, மயிலாடுதுறை மீனவர்கள் 18 பேர் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். அவர்களை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
மீனவர்கள் கைது
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிவகுமார்(வயது 48) மற்றும் சிவநேசன்(42) ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். 
13-ந் தேதி இரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படையினரால் 2 விசைப்படகுகளில் சென்ற 23 பேரும் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். 
விடுதலை
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்டுத்தரக்கோரி மத்திய-மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அளித்தனர்.
இந்த நிலையில் இலங்கை அரசு கடந்த 15-ந் தேதி 23 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனால் நாகை மீனவர்கள் 23 பேரில் அக்கரைப்பேட்டை சிவநேசன், சிவசக்திவேல், சாமந்தான்பேட்டை வீரசேகர், பாண்டியராஜன், சந்திரபாடி விஜயேந்திரன் ஆகிய 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததால் அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. 
சொந்த ஊருக்கு வந்தனர்
மற்ற மீனவர்களான அகத்தியன், சிவராஜ், சம்பத், கந்தன், முருகேசன், ஆறுமுகம், வினித், வீரக்குமார், சுதாகர், தனராஜ், குட்டியாண்டி, அமிர்தசெல்வம், இளங்கோவன், உத்ராபதி, தமிழ்வாணன், ரவி, சாமிநாதன், குமார் ஆகிய 18 பேரும் இலங்கையில் இருந்து விமானம் மூலமாக நேற்று சென்னைக்கு வந்தனர்.
இதையறிந்த நாகை மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் மற்றும் அக்கரைப்பேட்டை மோகன்தாஸ் தலைமையில் 5 மீனவ பஞ்சாயத்தார்கள் சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று 18 மீனவர்களையும் பாதுகாப்பாக ஊருக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்களை தரங்கம்பாடியில் உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு 13 மீனவர்களை நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 
கண்ணீர் மல்க வரவேற்பு
அக்கரைப்பேட்டை வந்த மீனவர்களை அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். மீதமுள்ள 5 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளையும் உடனே மீட்டுத்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Next Story