தமிழ் இளம் தலைமுறையினர் சாதி, மத உணர்வை தூக்கி எறிய வேண்டும்


தமிழ் இளம் தலைமுறையினர் சாதி, மத உணர்வை தூக்கி எறிய வேண்டும்
x

தமிழ் இளம் தலைமுறையினர் சாதி மத உணர்வை தூக்கி எறிய வேண்டும் என்று திருப்பூரில் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

திருப்பூர்
தமிழ் இளம் தலைமுறையினர் சாதி, மத உணர்வை தூக்கி எறிய வேண்டும் என்று திருப்பூரில் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
மாவீரர் நாள்
திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை திருப்பூர் தாராபுரம் ரோடு வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காலையில் 67 பேர் கண் தானம், 67 பேர் ரத்த தானம் செய்தனர். மாலையில் தமிழீழ விடுதலை போரில் இன்னுயிர் ஈத்த மாவீரர்களுக்கு ஈகை சுடர் ஏற்றி, மெழுகுவர்த்தி ஏந்தி அனைவரும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:-
சாதி, மதத்தின் பெயரால் தமிழன் வேறுபட்டுள்ளான். மற்றவர்கள் உயிர் வாழ தனது உயிரை கொடுத்து காப்பவனே உண்மையான வீரன். தமிழ் இளம் தலைமுறையினர் சாதி, மத உணர்வை தூக்கி எறிய வேண்டும். தமிழன் என்ற உணர்வோடு ஒன்றுபட வேண்டும். தமிழர்கள் ஒன்றிணைந்தால் அரசியல் வலிமை பெறும். அதன்பிறகு அதிகாரம் வலிமை பெறும். அதன்பிறகே தேச விடுதலை பெற முடியும்.
3-வது பெரிய கட்சி
எந்த வேலையும் இழிவல்ல. எந்த வேலையும் செய்யாமல் இருப்பதே இழிவாகும். வேலை செய்யாமல் இருக்க, இருக்க, வடநாட்டுக்காரர்கள் இங்கு வேலைக்கு வருகிறார்கள். ஒரு கட்டத்தில் சொந்த மண்ணில் அகதியாகும் நிலை ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சியில் சீட் கிடைக்கும் என்று வேலை செய்யக்கூடாது. யாருக்கு சீட் வழங்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன் இனத்துக்காக பாடுபட வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி எழுச்சி பெறும். தமிழ் இனத்தின் விடுதலைக்கு கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாடுபடுவேன். அடுத்த தலைமுறையினருக்கும் தமிழ் இனத்தின் விடுதலையை எடுத்துக்கூற வேண்டும். மாவீரர் நாள் என்பது தமிழ் தேசிய இனத்தின் எழுச்சி நாளாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தெற்கு மாவட்ட தலைவர் ரத்னா ஜோ.மனோகர், வடக்கு மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார், ரமேஷ்குமார், பொருளாளர் வெங்கடாசலபதி, தெற்கு மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், கிழக்கு மாவட்ட பொருளாளர் சிவானந்தம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் சீமான் நிருபர்களை சந்தித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:- 
ஏற்கனவே நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்துப்போட்டியிடுவோம். 7 பேர் விடுதலை என்பது கவர்னரின் கையெழுத்துக்காக காத்திருக்க வேண்டியது இல்லை. 166 சட்டவிதிகளின்படி வெளியிடலாம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே தெரிவித்துள்ளார். தற்போதைய முதல்-அமைச்சரை சந்திக்கும்போது நான் இதை வலியுறுத்தினேன். அந்த வாய்ப்பு நமக்கு இருக்கும்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.  பாலியல் தொந்தரவு மன உளைச்சலால் குழந்தைகள் உயிரை மாய்க்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த முடிவுக்கு குழந்தைகள் வர வேண்டாம் என்றும், ஒரு தந்தையாக இருந்து இதை தடுப்போம் என்றும் சொல்லியிருக்கிறார். சட்டம்-ஒழுங்கை இன்னும் சரி செய்ய வேண்டும். முதல்-அமைச்சரின் பொறுப்புணர்வை பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். வருத்தமிக்க செய்தி. யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. இருக்கின்ற யானைகளை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் யானையை பொம்மைகளாகத்தான் எதிர்கால சந்ததிகளுக்கு காட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில இளைஞர் பாசறை செயலாளர் ஜெகதீஷ்பாண்டியன், பொருளாளர் ராவணன் ராஜன், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்னா மனோகர், நிர்வாகிகள் சுப்பிரமணியம், வான்மதி வேலுச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story