கை, கால்களை கட்டிப்போட்டு முத்திரைத்தாள் விற்பனையாளர் கொலை


கை, கால்களை கட்டிப்போட்டு முத்திரைத்தாள் விற்பனையாளர் கொலை
x
தினத்தந்தி 27 Nov 2021 11:06 PM IST (Updated: 27 Nov 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் கை, கால்களை கட்டிப்போடு முத்திரைத்தாள் விற்பனையாளர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பழைய ரிஜிஸ்டர் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 63). முத்திரைத்தாள் விற்பனையாளர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் சேகர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சேகர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே சின்னசேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சேகரை மர்மநபர்கள் கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. 

பீரோ உடைப்பு

மேலும் வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நகை, பணம் கொள்ளை போனதா என்பது பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து சேகரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கொலை செய்தவர்கள் யார்? நகை-பணத்துக்காக கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கை, கால்கள் கட்டப்பட்டு முத்திரைத்தாள் விற்பனையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story