ஏரல் அருகே மறுகால் வாய்க்காலில் உடைப்பு; நீரில் மூழ்கிய பயிர்கள்


ஏரல் அருகே மறுகால் வாய்க்காலில் உடைப்பு; நீரில் மூழ்கிய பயிர்கள்
x
தினத்தந்தி 27 Nov 2021 11:06 PM IST (Updated: 27 Nov 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே மறுகால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், பயிர்கள் நீரில் மூழ்கின.

ஏரல்:
ஏரல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், சிவகளை குளம் நிரம்பி உள்ளது. அங்கிருந்து பெருங்குளத்துக்கு அதிகளவு தண்ணீர் வந்ததால் பெருங்குளமும் நிரம்பியது.  இதையடுத்து பாதுகாப்பு கருதி பெருங்குளத்தில் இருந்து தண்ணீர் மறுகால் வாய்க்காலில் நேற்று திறந்து விடப்பட்டது.

அப்போது நட்டாத்தி மற்றும் மணலூர் அருகே வாய்க்கால் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்தது. இதன் காரணமாக அங்கு பயிரிடப்பட்டு உள்ள தென்னை, வாழை, நெற்பயிர்கள் தண்ணீரில்  மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் கரையோரங்களில் உள்ள கோவில்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இன்னும் அதிகளவு தண்ணீர் வந்தால் காமராஜர்நல்லூர் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

Next Story