கீரனூர் அருகே ஆடுதிருடி சென்றபோது மடக்கிப்பிடித்த சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்தது பற்றி போலீசாரிடம் நடித்து காட்டிய வாலிபர் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு
ஆடு திருடி சென்றபோது மடக்கிப்பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை கொலை செய்தது எப்படி? என்பது பற்றி கைதான வாலிபர் மணிகண்டன் போலீசாரிடம் நடித்து காட்டினார். ஒருநாள் போலீஸ் காவலில் விசாரணை முடிந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை:
சப்-இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம்
திருச்சி நவல்பட்டு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (வயது 55). இவர் கடந்த 20-ந் தேதி இரவு ரோந்து பணியில் இருந்த போது ஆடு திருடி சென்ற 3 பேரை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று பிடித்தபோது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகே தோகூரை சேர்ந்த மணிகண்டன் (19) மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அவரது உறவினர்களான 14 வயது சிறுவன், 9 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் கைதான சிறுவர்களில் ஒருவன் 9-ம் வகுப்பும், மற்றொருவன் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
கொலை செய்தது எப்படி?
கைதானவர்களில் மணிகண்டனை 1 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கீரனூர் கோர்ட்டு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இதையடுத்து மணிகண்டனிடம் போலீசார் நேற்று முன்தினம் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை விசாரணைக்கு பின் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருமயம் சிறையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அடைத்தனர்.
போலீஸ் காவலில் எடுத்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான மணிகண்டனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று, அவரை எப்படி கொலை செய்தார்? என்பது குறித்து தகவல் பெறப்பட வேண்டியிருந்தது. இதனால் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றோம். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து மணிகண்டன் நடித்து காட்டினார். இதில் சப்-இன்ஸ்பெக்டரின் பின் தலையில் கற்களால் தாக்கியும், 5 முறை அரிவாளால் அவரை வெட்டியதாகவும் அப்போது சிறுவர்கள் அருகே தள்ளி நின்றிருந்ததாகவும் தெரிவித்தார்.
சொந்தமான ஆடு என்று கூறி...
தோகூரில் திருடிய ஆட்டை கீரனுர் அருகே ஒருவரிடம் மணிகண்டன் விற்றிருக்கிறார். ஆட்டை வாங்கிய நபரும், திருட்டு ஆடுதானா? என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மணிகண்டன் மறுத்து தனக்கு சொந்தமான ஆடு தான் எனக்கூறி விற்றிருக்கிறார். இருப்பினும் ஆட்டை வாங்கிய நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு தகவல் பெறப்படும். மணிகண்டனிடம் ஏற்கனவே வாக்குமூலத்தில் பெறப்பட்ட தகவல்கள் தான். வேறு கூடுதல் தகவல் எதுவும் விசாரணையில் இல்லை.
இவ்வாறு கூறினர்.
மணிகண்டனை போலீஸ் காவலில் விசாரிக்க நேற்று மதியம் வரை அவகாசம் இருந்தாலும், தங்களுக்கு தேவையான விவரங்களை போலீசார் பெற்றதால் நேற்று முன்தினம் இரவே உடனடியாக அவரை சிறையில் அடைத்தனர். மேலும் மணிகண்டனிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் 3 ஆடுகளை போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் அடுத்தகட்டமாக குற்றப்பத்திரிகை தயாரித்து கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தோகூரில் வழக்குப்பதிவு
இதற்கிடையில் தோகூர் பகுதியில் ஆட்டை திருடிக்கொண்டு வந்தது தொடர்பாக தோகூர் போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிலும் மணிகண்டன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
Related Tags :
Next Story