மருதூர் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது


மருதூர் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது
x
தினத்தந்தி 27 Nov 2021 11:18 PM IST (Updated: 27 Nov 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மருதூர் தடுப்பணையில் இருந்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது.

ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் முதல் தடுப்பணையான மருதூர் தடுப்பணையை தாண்டி விழுந்து நேற்று வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றது. 

அந்த தண்ணீருடன் காட்டாற்று வெள்ளமும் கலந்து ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி வீணாக கடலுக்கு செல்கிறது. நேற்று காலையில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வினாடிக்கு 32 ஆயிரம் கன அடி தண்ணீரும், மாலையில் 26 ஆயிரம் கன அடி தண்ணீரும் வீணாக கடலுக்கு சென்றது.

தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசனம் பெறும் பெரும்பாலான குளங்கள் நிரம்பியதால், மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகியவை மூடப்பட்டன. எனினும் பல்வேறு இடங்களில் பெய்த மழையாலும், காட்டாற்று வெள்ளத்தாலும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், வட வல்லநாட்டில் உள்ள விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு சுமார் 25 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அங்கு தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

Next Story