தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 28 Nov 2021 12:00 AM IST (Updated: 28 Nov 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் வாழ்மால்பாளையம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தற்போது தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்து வருகின்றனர்.  இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், வாழ்மால்பாளையம், திருச்சி. 

பாதாள சாக்கடையில் அடைப்பு 
கனமழையின் காரணமாக பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டும், கழிவுநீர்  வெளியேறி மழைநீருடன் கலந்து செல்கிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் அந்த தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை சரி செய்யவும், கழிவு நீரை உறிஞ்சுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர பொதுமக்கள், பெரம்பலூர்.

ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால் வாய்க்கால் 
அரியலூர் மாவட்டம், தா.பழூர் நடுசெட்டி தெரு, ஆஞ்சநேயர் கோவில் மேலவீதி மற்றும் சிவன் கோவில் தெரு சந்திக்கும் இடத்தில் உள்ள தெரு சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. மேலும் கன மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலகிருஷ்ணன், தா.பழூர், அரியலூர். 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் கிராம பஞ்சாயத்து அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர், தாமுநகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை நாய்கள், கால்நடைகள் கிளறுவதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மாத்தூர், புதுக்கோட்டை. 

தெருநாய்களால் விபத்து 
கரூர் மாவட்டம்,  நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நச்சலூர் வ.உ.சி. நகர் பகுதியில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் நடந்து செல்லும் பொதுமக்களை பார்த்து குறைப்பதும், கடிக்க வருவதுமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.  மேலும் இவை சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நச்சலூர், கரூர். 

பழுதான பள்ளி கட்டிடம் அகற்றப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள நடுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பருக்கை விடுதி கிராமம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் கடந்த 1965-ம் ஆண்டு கட்டப்பட்ட 2 வகுப்பு அறைகளை கொண்ட பழமையான ஓட்டு கட்டிடம் பழுதடைந்து மேற்கூரைகள் இல்லாமல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தை முற்றிலுமாக இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நடுப்பட்டி, புதுக்கோட்டை.

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
கரூர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள வாழைக்காய் மண்டி பகுதியில்  தற்போது பெய்த மழையால் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீருடன் குப்பைகள் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
குமார், கரூர்.

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
திருச்சி கிராப்பட்டி ஆரோக்கிய நகர் 4வது வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கிராப்பட்டி, திருச்சி. 

ஆடு, கோழிகளை கடித்து குதறும் தெருநாய்கள்
திருச்சி மாநகராட்சி 53-வது வார்டில் உள்ள கொடாப்பு கிராமத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நாய்கள்  சாலையில் செல்லும் குழந்தைகளையும், பெண்களையும் கடிக்க வருகிறது. மேலும் ஒன்றோடு ஒன்று சாலையில் சண்டையிட்டுக்கொள்வதுடன் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சில நாய்கள் வெறிபிடித்து இப்பகுதியில் உள்ள கோழி, ஆடுகளை கடித்து குதறுகிறது. இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கோமதி, கொடாப்பு, திருச்சி. 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், ராமச்சந்திரநகர் ஹெல்த் காலனி பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதியில் பெய்த மழை நீர் வடிந்து செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கின்றன. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்கு புகுந்து விடுகிறது. இதனால் விஷஜந்துக்கள் வீட்டினுள் நுழைவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ராமச்சந்திராநகர், திருச்சி. 

பாதாள சாக்கடைகளில் அடைப்பு 
திருச்சி மாநகராட்சி 47-வது  வார்டு கூனிபஜார் பகவதி அம்மன் கோவில் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அதன் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கூனிபஜார், திருச்சி. 
இதேபோல் திருச்சி எஸ்.எம்.எஸ். காலனி விநாயகர் மரத்தடி கோவில் முன்பு  பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அதன் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், எஸ்.எம்.எஸ். காலனி, திருச்சி. 

Next Story