அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் கட்டிடம் கட்டுவதாக புகார்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
குளித்தலை அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் கட்டிடம் கட்டுவதாக புகார் கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினார்.
குளித்தலை,
ஆக்கிரமிப்பு
குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நடந்து செல்ல பாதை இல்லாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் ஆக்கிரமிப்பை அகற்றி தரப்பட்டது.
மேலும் கடந்த 2015-ம் ஆண்டு இதே பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டத்தின் விளைவாக மீண்டும் அப்பகுதியில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும், இந்த நிலம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
காத்திருப்பு போராட்டம்
இந்தநிலையில் பிரச்சினைக்குரிய இடத்தில் அந்த தனிநபர் கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டு அவரிடம் கூறப்பட்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தையின் முடிவின்படி நடந்து கொள்ளாமல் அந்த தனிநபர் நேற்று மீண்டும் கட்டுமான பணியை மேற்கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முரளிதரன், தாசில்தார் விஜயா ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தாசில்தார் விஜயா சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். பின்னர் அங்கு கட்டுமான பணிகளை தொடரக்கூடாது என அந்த தனி நபரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து குளித்தலை போலீசார் சம்பந்தப்பட்ட நபரை குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து 25 நாட்களுக்கு எவ்வித கட்டுமான பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்று அவரிடம் எழுதி வாங்கியுள்ளனர்.
மீண்டும் போராட்டம்
இந்தநிலையில் வருவாய் துறை அதிகாரிகள் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்துவிட்டு தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story