சிறுநீரகத்தை தானமாக வழங்க மனைவியின் ஒப்புதல் தேவை என்ற உத்தரவு ரத்து-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிறுநீரகத்தை தானமாக வழங்க மனைவியின் ஒப்புதல் தேவை என்ற உத்தரவை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை
சிறுநீரகத்தை தானமாக வழங்க மனைவியின் ஒப்புதல் தேவை என்ற உத்தரவை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சிறுநீரகங்கள் செயல் இழப்பு
மதுரை ஐகோர்ட்டில் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவில், எனக்கு 40 வயதாகிறது. என்னுடைய சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்டன. இந்தநிலையில் எனது உறவினர் ஒருவர் அவரது சிறுநீரகத்தை தானமாக எனக்கு வழங்க முன்வந்துள்ளார். இதனால் இருவரின் உடலிலும் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று மருத்துவ அறிக்கை அளிக்கப்பட்டது.
ஆனால் சிறுநீரகம் தானமாக கொடுப்பது குறித்து அந்த உறவினரின் மனைவி பிரமாணப்பத்திரம் அளிக்கவில்லை என்று கூறி, எனது விண்ணப்பத்தை நிராகரித்து மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. அந்த உறவினருக்கும், அவரது மனைவிக்கும் இடையே புதுக்கோட்டை குடும்பநல கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே மருத்துவக்கல்வி இயக்குனரகம் நிராகரித்த உத்தரவை ரத்து செய்தும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
தாயார் பிரமாண பத்திரம்
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரருக்கு சிறுநீரக தானம் செய்ய இருப்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப நல கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இதுதொடர்பாக அவர் பிரமாணப்பத்திரம் வழங்குவார் என்று எதிர்பார்க்க முடியாது. அது நடக்காத ஒன்று.
அதேநேரத்தில் சிறுநீரகம் தானம் செய்பவரின் தாயார், தன் மகன் தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என பிரமாணப்பத்திரம் கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.
ரத்து
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரருக்கு அவரது உறவினர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு அவரது தாயார் சம்மதம் தெரிவித்துள்ளார். பிற மருத்துவ காரணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், அவரது தாயாரின் பிரமாணப்பத்திரமே போதுமானது. இதற்கு அவரது சகோதரியும் ஒப்புதல் அளித்ததாக என்னுடைய கவனத்திற்கு வந்துள்ளது.
எனவே இதுதொடர்பாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான விண்ணப்பம், மனுதாரர் உறவினரின் தாயார் அளித்த பிரமாணப்பத்திரம், மனைவியுடனான வழக்கு விவரங்கள் அனைத்தையும் மீண்டும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும். அதன்பேரில் மருத்துவக்கல்வி இயக்குனரகம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என இந்த கோர்ட்டு நம்புகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story