நகைக்கடை அதிபர் கழுத்தில் கத்தியை வைத்து 103 பவுன் நகை கொள்ளை


நகைக்கடை அதிபர் கழுத்தில் கத்தியை வைத்து   103 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 28 Nov 2021 1:22 AM IST (Updated: 28 Nov 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

நகைக்கடை அதிபர் கழுத்தில் கத்தியை வைத்து 103 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

பெரம்பலூர்:

நகை-ஜவுளிக்கடை உரிமையாளர்
பெரம்பலூரில் துறையூர் சாலையில் சங்குப்பேட்டை அருகே உள்ள சர்ச் ரோட்டை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 60). இவர் தனது மனைவி பரமேஸ்வரி, மகன் ஆனந்தராஜ், மருமகள் அபி, மகள் ரேணுகா ஆகியோருடன் வசித்து வருகிறார். மேலும் அவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் காமராஜர் வளைவு அருகே ஸ்ரீஆனந்த் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடையும், ஸ்ரீஆனந்த் சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடையும் நடத்தி வருகிறார்.
தற்போது அபிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொழில் சம்பந்தமாக ரேணுகா சென்னைக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மதியம் ஆனந்தராஜ் திருச்சிக்கு காரில் சென்று விட்டார். அன்று இரவு பரமேஸ்வரி கடையில் இருந்துள்ளார். இதற்கிடையே கடையில் இருந்து திரும்பிய கருப்பண்ணன் இரவில் தனியாக வீட்டில் இருந்து டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.
கழுத்தில் பட்டாக்கத்தியை வைத்து...
இரவு 10.30 மணியளவில் அவரது வீட்டின் அருகே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மர்மநபர்கள் வந்து இறங்கினர். அவர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு கருப்பண்ணன் வீட்டிற்குள் புகுந்து கதவை அடைத்து உள்புறமாக தாழ்ப்பாள் போட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த கருப்பண்ணன் சத்தம் போட முயன்றார். ஆனால் மர்மநபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த சுமார் 2 அடி நீள பட்டாக்கத்தியை எடுத்து கருப்பண்ணன் கழுத்தில் வைத்து, ‘சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்’ என்று மிரட்டினார். இதனால் அச்சத்தில் உறைந்த அவர் ஷோபாவில் அமர்ந்து விட்டார்.
இதையடுத்து அவர் கையில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்த மர்ம நபர்கள், மீதமுள்ள நகை, பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டு மிரட்டினர். உயிர் பயத்தில் இருந்த அவர், நகை, பணம் பீரோவில் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து கருப்பண்ணனிடம் இருந்து பீரோ சாவியை பறித்த மர்ம நபர்கள், அவரது முகத்தில் துணியை கொண்டு மூடியுள்ளனர்.
நகைகள்- வெள்ளிப்பொருட்கள் கொள்ளை
பின்னர் படுக்கையறையில் உள்ள பீரோ உள்ளிட்டவைகளில் இருந்த தலா 5 பவுன் எடைகொண்ட 6 தங்க வளையல்கள், 6 பவுன் நெக்லஸ், 31 பவுன் ஆரம், 7 பவுன், 2 பவுன் மற்றும் 8 பவுன் சங்கிலிகள், 1½ பவுன் டாலர், தலா 1½ பவுனிலான 2 மோதிரங்கள், 1 பவுன் மோதிரம், 1 பவுன் கல் மோதிரம், அரை பவுன் பவள மோதிரம், அரை பவுன் கசை மோதிரம், 6 பவுன் அட்டிகை, 1¾ பவுன் எடையுள்ள 3 ஜோடி தோடு மற்றும் ஏற்கனவே கருப்பண்ணனிடம் பறித்த 4 பவுன் சங்கிலி என மொத்தம் 103¼ பவுன் நகை, 9 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.
பின்னர் கருப்பண்ணனிடம் இருந்து கார் சாவியையும் பறித்தனர். இதையடுத்து மர்மநபர்களில் 2 பேர் கொள்ளையடித்த நகை, வெள்ளி பொருட்கள், பணத்துடன் வீட்டின் வளாகத்தில் பின்புறம் நிறுத்தியிருந்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள காரில் ஏறி ஆத்தூர் சாலையில் தப்பி சென்றனர். மற்றொரு மர்மநபர், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இந்த கொள்ளை சம்பவத்தால் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்த கருப்பண்ணன், பின்னர் இதுகுறித்து தனது மகன் மற்றும் மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
மேலும் இது குறித்து கருப்பண்ணன் குடும்பத்தினர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததால், மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்க முடியாமல் திணறினர்.
இதையடுத்து கருப்பண்ணன் வீட்டின் பின்புறம் அருகே உள்ள வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் மர்மநபர்களில் ஒருவரது உருவம் பதிவாகியிருந்தது. அந்த நபர் பச்சை நிற கட்டம் போட்ட சட்டையும், வேட்டியும், வெள்ளை நிற கைக்குட்டையை தலையில் கட்டியிருந்ததும், கார் பெரம்பலூரை நோக்கி சென்றதும் தெரியவந்தது. இதனால் அந்த நபர் பின்புறம் இருந்து காரை வீட்டின் முன்புறத்திற்கு ஓட்டி வந்து, அங்கிருந்த மற்றொருவரை ஏற்றிக்கொண்டு காரில் தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதற்கிடையே அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய், ரோவர் வளைவு அருகே ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, வெள்ளி பொருட்கள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story