புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் ெதாடர்பான பதிவுகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்வயர்கள்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் கண்ணமுத்தான்கரை கிராமத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள மின்சார வயர்கள் அனைத்தும் வீடுகளை ஒட்டியவாறு தாழ்வாக செல்கின்றன. மாடியில் விளையாடும் போது சிறுவர்கள் கையால் தொடும் உயரத்தில் உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கண்ணமுத்தான்கரை.
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு கிராமம் முதல் நாகநாதசமுத்திரம் வழியாக முத்துப்பேட்டை செல்லும் ராணி மங்கம்மா சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழை காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை அதிகாரிகள் சீரமைப்பார்களா?
கார்த்திக். பூசாரிவலசை.
தெருவிளக்குகள் தேவை
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கோட்டநத்தம்பட்டி செட்டியூரணி சந்தைப்பேட்டைக்கு கிழக்கு பக்கம் இருக்கும் குடியிருப்பு பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. இதன் காரணமாக இரவு நேரத்தில் இவ்வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் சமூக விரோதிகள் அட்டகாசம் உள்ளது. எனவே, இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், செட்டியூரணி.
நாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டவுனில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவைகள் சாலையின் குறுக்கே படுத்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தொல்லை தரும் நாய்களை அதிகாரிகள் பிடித்து அப்புறப்படுத்துவார்களா?
அலாவுதீன், மானாமதுரை.
தேங்கி நிற்கும் மழைநீர்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டில் வேல்நகர் உள்ளது. இங்கு தற்போது பெய்த மழையால் மழைநீரும், கழிவுநீரும் கலந்து குடியிருப்பு பகுதி முழுவதும் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் நடந்து செல்லவே பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரவேல், மதுரை.
தடுப்பணை வேண்டும்
வைகை ஆற்றில் மழை காலத்தில் அதிக அளவில் தண்ணீர் சென்று எந்த உபயோகமும் இன்றி ராமநாதபுரம் அருகே உள்ள ஆற்றங்கரை என்ற இடத்தில் கடலில் கலந்து வீணாகிறது. இங்குள்ள நதிப்பாலம் அருகே தடுப்பணை கட்டினால் வீணாகும் உபரி நீரை சேமிக்கலாம். இதன்மூலம் பொதுமக்கள் பயனடைவார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
குரங்குகள் அட்டகாசம்
சிவகங்கை மாவட்டம் பைகுடிபட்டி கிராமத்தில் குரங்்குகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. வீடுகளில் ஆள் இல்லாத நேரத்தில் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி உணவு பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. மேலும் பொதுமக்களையும் கடிக்க வருகின்றன. பொதுமக்களின் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.
சுந்தரம், சிவகங்கை.
சேறும், சகதியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைகோட்டை கீரை கணேசன்நகர் செல்லும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டும்.
பிச்சைமணி, அருப்புக்கோட்டை.
பன்றிகளால் சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் தங்கப்பா நகர் பகுதிகளில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த பன்றிகள் சாக்கடை கால்வாயில் படுத்து உருண்டு விட்டு சேறும், சகதியுமாக தெருக்களில் சுற்றுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
கொசுத்தொல்லை
மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின்ே்ராடு கோச்சடை காளை அம்பலக்காரர் தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்கடியால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இரவில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் அவர்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜன், கோச்சடை.
Related Tags :
Next Story