மின்சாரம் பாய்ச்சி வாலிபர் படுகொலை


மின்சாரம் பாய்ச்சி வாலிபர் படுகொலை
x
தினத்தந்தி 28 Nov 2021 1:35 AM IST (Updated: 28 Nov 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே மின்சாரம் பாய்ச்சி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

திசையன்விளை:
திசையன்விளை அருகே மின்சாரம் பாய்ச்சி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அக்காள் மகனை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் டேவிட் ஜீசர். இவருைடய மகன் டேவிட் ராஜ் (வயது 25), கூலி தொழிலாளி. இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
டேவிட் ராஜின் பெற்றோர், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வசித்து வருகின்றனர். இதனால் டேவிட் ராஜ், மிட்டாதார்குளத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய அக்காள் மரிய ஷோபாவும் அதே ஊரில் வசித்து வருகிறார்.

பணம் கேட்டு தகராறு

டேவிட் ராஜ் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் அடிக்கடி தகராறு செய்ததாகவும், உறவினரின் மளிகை கடைக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் டேவிட் ராஜ் நேற்று தன்னுடைய அக்காள் மரிய ஷோபாவின் வீட்டுக்கு சென்று ரூ.30 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த டேவிட் ராஜ், அக்காள் வீட்டில் இருந்த துணிகளை தீ வைத்து எரித்தார்.

மின்சாரம் பாய்ச்சி கொலை

இதனை அறிந்த மரிய ஷோபாவின் மகன் பிரிட்டோ பனிக்குமார் (32) தனது மாமா என்றும் பாராமல் டேவிட் ராஜை மரத்தில் கட்டி வைத்து மின் ஒயரால் உடலில் மின்சாரம் பாய்ச்சியதாகவும், பின்னர் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் டேவிட் ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, டேவிட் ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரிட்டோ பனிக்குமாரை கைது செய்தனர். திசையன்விளை அருகே வாலிபரை மின்சாரம் பாய்ச்சி அக்கள் மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story