தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 2 பேருக்கு கொரோனா
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு எந்த வகையான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டறிய அவர்களின் சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கலெக்டர் ஆய்வு
தென் ஆப்பிரிக்கா நாட்டில் புதிய வகை கொரோனா வைரசான ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் ஆகும். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு நடைபெறும் பரிசோதனை உள்ளிட்டவை குறித்து பெங்களூரு புறநகர் மாவட்ட கலெக்டர் சீனிவாஸ் நேற்று காலையில் ஆய்வு நடத்தினார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு முழுமையான பரிசோதனை நடத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். பின்னர் கலெக்டர் சீனிவாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
24 மணிநேரமும் கண்காணிப்பு
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின் பேரில் தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வரும் விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்றார் போல் பெங்களூரு விமான நிலையத்தில் அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தாலும், அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை நடத்தப்படும். மற்ற 94 நாடுகளில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தால் போதும், அவர்களுக்கு மற்ற எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.
பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து இதுவரை பெங்களூருவுக்கு 584 விமான பயணிகள் வந்துள்ளனர். அவற்றில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து மட்டும் 94 பேர் வந்திருக்கிறார்கள். அவர்கள் 94 பேருக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் தற்போது பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒருவர் பொம்மனஹள்ளியில் உள்ள ஓட்டலிலும், மற்றொருவர் இன்னொரு ஓட்டலிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2 பேரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், அவர்கள் எந்த மாதிரியான வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. அது எந்த விதமான வைரஸ் என்பதை கண்டுபிடிக்க, அவர்களது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தான் அது எந்த மாதிரியான வைரஸ் என்பது தெரியவரும்.
இவ்வாறு கலெக்டர் சீனிவாஸ் கூறினார்.
Related Tags :
Next Story