கர்நாடகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - மந்திரி சுதாகர் தகவல்
கர்நாடகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்தார்.
பெங்களூரு:
கொரோனா பரவல் அதிகரிப்பு
கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் 3-வது அலை உருவாகி விட்டதாக மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘கர்நாடகத்தில் பெங்களூரு, பெங்களூரு புறநகர் மாவட்டம், தார்வாரில் பள்ளி, கல்லூரிகள், விடுதிகளில் கொரோனா பரவி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தை கர்நாடக அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பற்றியும் கவனத்திற்கு வந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்’’ என்றார்.
ஆலோசனை...
அதே நேரத்தில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் புதிதாக உருவாகி உள்ள ஒமிக்ரான் வைரஸ், கர்நாடகத்தில் பரவுவதை தடுப்பது குறித்தும் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் ஆதங்கப்பட வேண்டாம்
‘‘தார்வார் மருத்துவ கல்லூரியில் 281 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 2 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 281 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களது சளிமாதிரி பெறப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை டிசம்பர் முதல் வாரத்தில் கிடைக்கும்.
நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டாலும், 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதால் எந்த விதமான பாதிப்பும், பரவலும் ஏற்படவில்லை. தற்போது தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வைரஸ் பரவுவதை தடுக்க மாநிலம் முழுவதும் விமான நிலையத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் ஆதங்கப்பட வேண்டாம்’’ என்றார்.
Related Tags :
Next Story