பெங்களூரு பசவனகுடியில் கடலைக்காய் திருவிழா நாளை தொடக்கம்


பெங்களூரு பசவனகுடியில் கடலைக்காய் திருவிழா நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 28 Nov 2021 2:39 AM IST (Updated: 28 Nov 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பசவனகுடியில் வரலாற்று சிறப்பு மிக்க கடலைக்காய் திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றும்படி மக்களுக்கு, மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா அறிவுறுத்தி உள்ளார்.

பெங்களூரு:

நாளை கடலைக்காய் திருவிழா

  பெங்களூரு பசவனகுடியில் தொட்ட கணபதி கோவிலில் ஆண்டுதோறும் கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கடலைக்காய் திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். கடந்த ஆண்டு (2020) கொரோனா காரணமாக பசவனகுடியில் கடலைக்காய் திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால் பசவனகுடியில் வரலாற்று சிறப்பு மிக்க கடலைக்காய் திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

  வருகிற 1-ந் தேதி வரை 3 நாட்கள், இந்த கடலைக்காய் திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து, கடலைக்காய் திருவிழா கொண்டாட்டத்திற்காக பெங்களூரு மாநகராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த கடலைக்காய் வியாபாரிகள், பசவனகுடிக்கு வந்துள்ளனர்.

கொரோனா விதிமுறைகள்

  இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பசவனகுடியில் கடலைக்காய் திருவிழா வருகிற 29-ந் தேதியில் (அதாவது நாளை) தொடங்கி 1-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. கடலைக்காய் திருவிழாவை பார்க்க வரும் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். பெங்களூருவில் கொரோனா பரவுவதை தடுக்க கடலைக்காய் திருவிழாவுக்கு வருபவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

  கடலைக்காய் திருவிழாவையொட்டி பசவனகுடி தொட்ட கணபதி கோவில், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடலைக்காய் திருவிழா நடைபெறும் 3 நாட்களிலும் பசவனகுடி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Next Story