ரூ.2½ கோடியில் மின்மயானம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்


ரூ.2½ கோடியில் மின்மயானம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 Nov 2021 4:07 AM IST (Updated: 28 Nov 2021 10:01 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மிட்டாபுதூரில் ரூ.2 கோடியே 48 லட்சத்தில் நவீன மின்மயானம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 5-வது வார்டு அழகாபுரம் பெரியபுதூரில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான மின் மயானம் அமைத்தல், ஏ.டி.சி.நகர் பகுதியில் தரைப்பாலம் அமைத்தல் மற்றும் பெரியபுதூரில் ஆரம்ப சுகாதார நிலையம் விரிவுப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மிட்டாபுதூர் முனியாகவுண்டர் சாலையில் உள்ள மயானத்தில் 7 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பில் ரூ.2 கோடியே 48 லட்சத்தில் நவீன மின்மயானம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. உடனிருந்தார்.

இதனை தொடர்ந்து படையப்பா நகர் பகுதியில் காலியாக உள்ள இடத்தில் சந்தை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்தும், மாருதி கார்டன் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், வரும் காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு மழைநீர் வருவதை முழுவதுமாக தடுப்பதற்கும் மேற்கொள்ள வேண்டி நடவடிக்கைகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த குறைகளை கேட்டறிந்தார். ஏ.டி.சி.நகர் பகுதியில் உயர்மட்ட தரைப்பாலம் கட்டி கொடுப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி செயற்பொறியாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதேபோல், சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் பழுதான உயர்மின்விளக்குகள் சரி செய்யப்பட்டதை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டார்.

மேலும், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நாமக்கல் நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் அருகில் ஒரு மின் விளக்கும், ஆத்தூர் நெடுஞ்சாலையில் ஒரு மின் விளக்கும் அமைத்திட மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story