காயம் அடைந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி


காயம் அடைந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 28 Nov 2021 4:07 AM IST (Updated: 28 Nov 2021 4:07 AM IST)
t-max-icont-min-icon

காயம் அடைந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

சேலம், நவ.28-
கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் உதவி கலெக்டர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
12 பேர் படுகாயம்
சேலம் கருங்கல்பட்டி பகுதியில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் தீயணைப்புத்துறை அதிகாரி பத்மநாபன் உள்பட 6 பேர் பலியானார்கள். இவர்கள் வசித்து வந்த வீடுகள் தரைமட்டம் ஆனது. இந்த விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே பாதுகாப்பு கருதி விபத்தில் வீடுகளை இழந்தவர்கள், மேலும் பக்கத்து வீடுகளில் வசிப்போர் சில நாட்களுக்கு தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் அவர்கள் தங்களது உறவினர்களது வீடுகளில் தங்கி உள்ளனர்.
முற்றுகையிட முயற்சி
இந்தநிலையில் விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சிலர் நேற்று மதியம் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு முற்றுகையிட வந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகவல் அறிந்த உதவி கலெக்டர் விஷ்ணுவர்தினி, செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் ஆகியோர் முற்றுகையிட வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் எங்களை வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் எங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் அப்படியே உள்ளது. எனவே இடிபாடுகளை உடனே அகற்றி எங்களை வீடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.
உதவி கலெக்டர் சமாதானம்
அதற்கு உதவி கலெக்டர் விஷ்ணுவர்தினி கூறும்போது, வீடுகள் சரிந்த பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் அனுமதி தந்தவுடன் வீடுகளுக்கு செல்ல அனுமதி தரப்படும். 4 வீடுகள் இடிந்து விழுந்ததால் அருகில் உள்ள வீடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு வரலாம்? என்று கருதுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை கருதி தான் வீடுகளுக்கு செல்ல அனுமதி தரவில்லை. இதனால் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்துகொள்ளுங்கள் என்றார். இதனையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிக்கு திரும்பி சென்றனர்.

Next Story