தர்மபுரி மாவட்டத்தில் ரூ382 கோடி மதிப்பில் நடைபெறும் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் அமைச்சர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் ரூ382 கோடி மதிப்பில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் ரூ382 கோடி மதிப்பில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் திவ்யதர்சினி, செந்தில்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூள்செட்டி ஏரிக்கு நீர் வழங்கும் திட்டம், எண்ணேக்கொல்புதூர் திட்டம், புலிக்கரை, அளியாளம் நீர்ப்பாசன திட்டம், ஈச்சம்பாடி தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரேற்று திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் 13 சாலை பணிகள், அதியமான்கோட்டை அருகே புதிய ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி உள்பட மொத்தம் ரூ.382.33 கோடி மதிப்பீட்டில் 54 சாலை பணிகள், மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
வெண்ணாம்பட்டி அருகே ரெயில்வே மேம்பாலம் அமைத்தல், தர்மபுரி புறவழி சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணியை துறை அலுவலர்கள் விரைவாக முடிக்க வேண்டும். ரூ.28.05 கோடி மதிப்பில் 8 தடுப்பணைகள் அமைக்கும் பணி, ரூ.50.50 கோடி மதிப்பில் அணைக்கட்டுகள் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணி ஆகியவற்றை துறை அலுவலர்கள் விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூடுதல் நிவாரண உதவி
இதை தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கூறுகையில், மழைக்காலங்களில் ஒகேனக்கல் காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும். தர்மபுரி மாவட்டத்தில் தினமும் 200 டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. தக்காளியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக நிதி ஆதாரங்களை வழங்கினால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் தனசேகரன், வத்சலாவித்யானந்தி, சரவணன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர்கள், குமார், பிரகாஷ், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story