தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது - மா.சுப்பிரமணியன்


தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது - மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 28 Nov 2021 2:21 PM IST (Updated: 28 Nov 2021 2:29 PM IST)
t-max-icont-min-icon

பருவமழை காலத்திலும் மக்கள் முகாம்களுக்கு அதிகமாக வருகின்றனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்தநிலையில் 12-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி இன்று 50000 மையங்களில் நடைபெற்று வரும் 12 வது மெகா  தடுப்பூசி முகாம்களையும் வெள்ளம் பாதித்த வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் இன்று 2 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருவமழை காலத்திலும் மக்கள் முகாம்களுக்கு அதிகமாக வருகின்றனர். தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. 

பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  டாஸ்மாக் கடைகளுக்கு செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயப்படுத்த மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story