மழை வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவின் ஆய்வு கூட்டம்


மழை வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவின் ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2021 2:41 PM IST (Updated: 28 Nov 2021 2:41 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மழை வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையிலான குழுவின் ஆய்வு கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

சென்னை,

சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், வெள்ளநீர் வடிகால்களை வடிவமைக்கவும் சுற்றுச்சூழல், நகர திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுனர்களை உள்ளடக்கிய சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக்குழு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், முன்னாள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூடுதல் செயலாளருமான வெ.திருப்புகழ் தலைமையில் சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான 14 உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த குழுவின் உறுப்பினர்களாக டெல்லி நகர் மற்றும் ஊரமைப்பு நிறுவன தலைமை திட்ட அலுவலரும், காலநிலை பின்னடைவு பயிற்சி உலக வள நிறுவன இயக்குனருமான நம்பி அப்பாதுரை, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ஜானகிராமன், மும்பை இந்திய தொழில்நுட்ப கழக கட்டுமான பொறியியல் துறை பேராசிரியர் கபில் குப்தா, சென்னை அண்ணா பல்கலைக்கழக மனித குடியமர்வு மைய இயக்குனர் பிரதீப்மோசஸ், ஐதராபாத்தில் உள்ள தேசிய தொலை உணர்வு துறையின் பிரதிநிதி, அண்ணா பல்கலைக்கழக தொலை உணர்வு நிறுவன பேராசிரியர் திருமலைவாசன், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக கட்டுமான பொறியியல் துறை (சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள ஆதார பொறியியல்) தலைவர் பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை திட்ட அதிகாரி, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் (மழைநீர் வடிகால்), சென்னை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர், சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் மழை வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில், வெ.திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட ஆலோசனை குழு உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் சென்னை மாநகரில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் குறித்தும் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. தொடர்ந்து சென்னையில் மழைநீர் வடிகால்களை பராமரிப்பது குறித்தும், புதிய மழைநீர் வடிகால்கள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story