சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை
புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
ஆலந்தூர்,
தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் ( ஓமிக்ரான்) பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான முனையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.
சென்னை பன்னாட்டு முனையம் வருகை பகுதியில் வெளிநாட்டு பயணிகளுக்கு செய்யப்படும் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார், பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திலும் ‘ஒமிக்ரான்’ ஊடுருவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் காய்ச்சல் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வேறு நாடுகள் வழியாக வருபவர்களும் கண்காணிக்கப்பட உள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உதவி திட்ட மேலாளர் நியமிக்கப்பட உள்ளார். இவர் விமான நிலையங்களில் பரிசோதனை செய்பவர்களுடன் இணைந்து கண்காணிப்பு அதிகாரியாக இருப்பார்.
சென்னையில் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். எந்த நாட்டில் இருந்து வந்தாலும், 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களையும் கண்காணித்து பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இதுவரை 55,090 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால் அது எந்த வகை வைரஸ் என்பது ஆய்வுக்கு பிறகு தெரியும். இதுவரை அச்சம் இல்லை என்றாலும் தீவிர கண்காணிப்பு அவசியம் என்பதால் இந்த பணியில் முழுமையாக ஈடு்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story