பொக்லைன் எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்த நல்ல பாம்புக்கு சிகிச்சை
கொரட்டூர் பகுதியில் பொக்லைன் எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்த நல்ல பாம்புக்கு வனத்துறை காப்பகத்தில் உள்ள ஆஸ்பத்திரி பெண் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
திரு.வி.க நகர்,
சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது சுமார் 5 அடி நீளமுள்ள 2 நல்ல பாம்புகள் பதுங்கி இருந்தது. அதில் ஒரு பாம்பு, பொக்லைன் எந்திரத்தில் சிக்கி காயம் அடைந்தது. மற்றொரு பாம்பு புதருக்குள் பதுங்கி விட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரியில் உள்ள வனத்துறை அதிகாரி தனசேகர் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் ஜெய்வினோத் சம்பவ இடத்துக்கு சென்று 2 பாம்புகளையும் லாவகமாக பிடித்து சென்றனர். பின்னர் காயம் அடைந்த நல்ல பாம்புக்கு வேளச்சேரி வனத்துறை காப்பகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டர் ஷவன்குமார் தலைமையில் பெண் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பாம்பு பூரண குணம் அடைந்ததும் அது வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் காயம் அடைந்த நல்ல பாம்புக்கு பெண் டாக்டர்கள் சிகிச்சை அளித்து உயிர் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story