திருநின்றவூரில் ஏரியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
திருநின்றவூரில் ஏரியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
ஆவடி,
ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் ஈஷா ஏரி உள்ளது. திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை தூர்வாரி குடியிருப்புகளை ஒட்டி ஏரிக்கரை அமைத்துள்ளனர்.
இதனால் சி.டி.எச் சாலை வழியாக ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் ஏரிக்குள் செல்ல முடியாமல் அப்படியே குடியிருப்பு பகுதிகளில் சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கன மழையால் ஏராளமான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அவர்கள் வீடுகளை காலி செய்து பல்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர்.
அதன்பின்னர் மழைநீர் வடிந்து பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் வீடுகளுக்கு வந்தனர். தற்போது பெய்து வரும் கனமழையால் மீண்டும் அதே போன்ற ஒரு நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஒருபக்கம் ஏரியில் இருக்கக்கூடிய உபரி நீரை குறைந்த அளவு திறந்து விட்டுள்ளனர். மறுபுறம் ஏரியை ஒட்டியுள்ள சுதேசி நகர், முத்தமிழ் நகர், திருவேங்கட நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பு் பகுதிகளில் உள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ள பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோரை அங்குள்ள தனியார் பள்ளியில் தங்க வைத்து உணவு வழங்கி வருகின்றனர்.
Related Tags :
Next Story