காஞ்சீபுரத்தில் பட்டா கத்தியுடன் அட்டகாசம் செய்த 4 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
காஞ்சீபுரத்தில் பட்டா கத்தியுடன் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிவிட்டு தப்பிச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் கடந்த 17-ந்தேதி அன்று சாலை தெரு பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பட்டா கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள் கடையின் உரிமையாரிடம் மாமூல் கேட்டு மிரட்டி, கடையை சூறையாடிவிட்டு தப்பி சென்றனர்.
அதனை தொடர்ந்து முன்விரோதம் காரணமாக ஏட்டு பிரபுவின் 2 மகன்களையும், சிறுவாக்கம் பகுதியில் ராஜமன்னார் மற்றும் வெங்கடேசன் ஆகியோரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா உத்தரவின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் நேரடி மேற்பார்வையில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, சுந்தர்ராஜ், ராஜகோபால், வெங்கடேசன், ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இதுதொடர்பாக சிறுவாக்கம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), ஜெகன்(29), வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த அட்டு அருண்(21), தேனம்பாக்கத்தை சேர்ந்த பிரசாந்த்(24), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் வெகுவாக பாராட்டினார். மேலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார்.
Related Tags :
Next Story