மழைப்பொழிவு குறைவு எதிரொலி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை
தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நேற்று முன்தினம் 141.60 அடியை எட்டியது.
நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 779 கனஅடியாக இருந்தது. இதைத்தொடர்ந்து கேரளாவுக்கு வினாடிக்கு 661 கனஅடியும், தமிழகத்துக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு குறைப்பு
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 847 கனஅடியாக குறைந்துள்ளது. இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 900 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அதுபோல கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 140 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 141.65 அடியாக உள்ளது.
மின்உற்பத்தி
முல்லைப்பெரியாறு அணை தண்ணீரால் லோயர்கேம்ப்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் நேற்று முன்தினம் வரை 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது தண்ணீர் திறப்பு குறைப்பால் 2 ஜெனரேட்டர்கள் மூலம் 84 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
பெரியாறு-0.4, தேக்கடி-2, கூடலூர்-2.2, உத்தமபாளையம்-1.4, வீரபாண்டி-4, மஞ்சளாறு-7.2.
Related Tags :
Next Story