‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மழைநீர் பாதிப்பு பதிவுகள்
திணறும் திருநின்றவூர்
திருநின்றவூரில் பல பகுதிகள் மழைவெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக திருநின்றவூர் அன்னை இந்திரா நகர் தனித்தீவு போன்று காட்சி அளிக்கிறது. 20 நாட்களாக பரிதவிக்கிறோம். எங்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
- பொதுமக்கள், திருநின்றவூர்.
பரிதவிக்கும் பல்லாவரம்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் 14-வது வார்டு ஜெயலட்சுமி நகரில் மழைநீரும், ஏரி தண்ணீரும் குளம் போன்று சூழ்ந்துள்ளது. மழை காலம் வந்துவிட்டாலே, இப்பகுதி நீர்நிலைகள் போன்று மாறி விடுகிறது. இப்பிரச்சினை 20 ஆண்டுகளாக இருக்கிறது. தீர்வு மட்டும் காணப்படவில்லை. எனவே தற்போது தேங்கி உள்ள தண்ணீரை விரைவில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்காதவாறு நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பகுதி மக்கள்.
சாலிகிராமத்தின் சிரமம்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள அருணாசலம் ரோடு, குமரன் காலனி, காவேரி தெரு மற்றும் ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கி இருக்கிறது. தற்போது பெய்த கனமழை காரணமாக மழைநீர் மட்டம் இன்னும் உயர்ந்திருக்கிறது. இதற்கிடையில் மழைநீருடன் கழிவுநீரும் சூழ்ந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் படையெடுப்பால் பல்வேறு நோய்கள் உருவாகும் சூழ்நிலையும் நிலவியிருக்கிறது. மழைநீர் சூழ்ந்து கிடப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லக்கூட மக்கள் அவதிப்படுகிறார்கள். தேங்கிய மழைநீரை அகற்றி மக்களுக்கு நிம்மதி தர நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ரவீந்திரன், சாலிகிராமம்.
ஆறான மயிலாப்பூர்
சென்னை மயிலாப்பூர் ரங்கையா கார்டன் விவேகானந்தா கல்லூரி அருகே உள்ள பகுதிகளில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடு, கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளோம். எனவே இப்பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.
- பகுதி மக்கள்.
மந்தைவெளி பஸ்நிலையம் தரைத்தளம் உயர்த்தப்படுமா?
சென்னை மந்தைவெளி பஸ்நிலையம் நெடுஞ்சாலையை விட உயரம் தாழ்வாக உள்ளது. இதனால் ஒருநாள் மழை பெய்தால் கூட பஸ்நிலையம் குளம் போன்று மாறிவிடுகிறது. இதனால் மாநகர பஸ் டிரைவர்களும், பயணிகளும் பரிதவிக்கும் நிலைமை உள்ளது. மழைக்காலம் வந்தாலே மந்தைவெளி பஸ்நிலையம் குளமாகுவதை தடுக்க வேண்டும் என்றால் பஸ்நிலையத்தின் தரைத்தளத்தை உயர்த்தி அமைக்க வேண்டும்.
- சி.சேதுராமன், ஆர்.டி.ஐ.ஆர்வலர்.
வேகத்தடை வேண்டும்
சென்னை அண்ணாநகர் தங்கம் காலனி 6-வது அவென்யூ சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த சாலையில் வேகத்தடை அமைத்தால் விபத்துகள் நேரிடாமல் தடுக்கலாம். எனவே இந்த சாலையில் போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து கள ஆய்வில் ஈடுபட்டு, தகுந்த இடத்தில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
- ஜான் போஸ்கோ, தங்கம் காலனி.
மேம்பால சாலையில் சேதம்
சென்னை பேசின்பிரிட்ஜில் இருந்து வியாசர்பாடி மார்க்கெட் பகுதியை நோக்கி செல்லும் மேம்பால இறக்க சாலையில் 2 இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இந்த பாலம் எப்போதும் வாகனங்களுடன் பரபரப்பாக காணப்படும். இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் தடுமாறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. எனவே இந்த பள்ளத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.சந்திரசேகர், சமூக ஆர்வலர்.
மின்கம்பம் மோசம்
செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஆண்டாள் நகர் மாருதி தெருவில் உள்ள மின்விளக்கு கம்பம் விரிசல் அடைந்துள்ளது. மேலும் சாய்ந்த நிலையில் இருக்கிறது. பலத்த காற்று அடித்தால் இந்த மின்கம்பம் விழுந்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே மோசமான நிலையில் இருக்கும் இந்த மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தாமஸ் எடிசன், பொழிச்சலூர்.
கோவில் குளம் அசுத்தம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி திரவுபதி அம்மன் கோவில் குளத்தில் குப்பை கூளங்கள் சூழப்பட்டு அசுத்தமாக உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களும் அதிகம் உற்பத்தியாகின்றன. எனவே கோவில் குளத்தில் உள்ள குப்பை கழிவுகளை தூர்வார வேண்டும். மீண்டும் குப்பைகள் சேராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பக்தர்கள்.
மின்கம்பத்தில் விரிசல்
சென்னை புழல் காவாங்கரை திருநீலகண்ட நகர் 5-வது தெருவில் உள்ள மின்கம்பம் கீழ்பகுதி நன்றாக இருக்கிறது. ஆனால் மேல் பகுதி விரிசலடைந்து பிளந்து இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள்.
சாலையை உயர்த்த வேண்டும்
தாம்பரம் மாநகராட்சி கீழ்கட்டளை ஜெயலட்சுமி தெரு மற்ற தெருக்களை விட தாழ்வாகவும் மழை நீர் கால்வாய் அகலம் குறைவாகவும் இருப்பதாலும் மழை நீர் ஆற்று வெள்ளம் போல் தெருவில் ஓடிக் கொண்டிருக்கிறது. குடியிருப்புக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. மழைக்காலம் வந்தால் இதே நிலைதான். இப்பகுதியில் உள்ள கால்வாயை அகலப்படுத்தி சாலையை உயர்த்தினால், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அதிகாரிகள் கவனிப்பார்களா?
- ஜெயலட்சுமி தெரு வாழ் மக்கள், கீழ்கட்டளை.
Related Tags :
Next Story