போடியில் தொடர் கனமழை மீனாட்சிபுரம் குளத்தில் படகு சவாரி விடப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை
போடியில் தொடர் கனமழை பெய்ததால் நிரம்பி உள்ள மீனாட்சிபுரம் குளத்தில் படகு சவாரி விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடி(மீனாட்சிபுரம்):
போடியில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு, காய்கறிகள், பூக்கள் ஆகியவை நாசமடைந்தன. எனவே விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் புதிதாக நடவு செய்யப்பட்ட நெல் பயிர்கள், வெங்காயம், கிழங்கு வகைகள், தக்காளி செடிகள் மழை நீரில் நனைந்து அழுகல் ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே தொடர் மழையால் கிணறுகள், கண்மாய்கள், குளங்கள் நிரம்பி உள்ளது. டாப் ஸ்டேஷன், கொட்டக்குடி மலைப்பகுதிகளில் பெய்த கன மழையால் போடி அருகே அம்மாபட்டி ஊராட்சியை சேர்ந்த மீனாட்சிபுரம் குளம் நிறைந்து கடல் போல் காட்சியளிக்கிறது. 6 மைல் பரப்பளவு உள்ள இந்த குளத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சிபுரம் குளத்தில் சுற்றுலா படகு சவாரி விட்டால் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும். மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழும். எனவே மீனாட்சிபுரம் குளத்தில் படகு சவாரி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story