மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடை தீவு உள்ளிட்ட 10 தீவுகளில் 25 ஆயிரம் பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடை தீவு உள்ளிட்ட 10 தீவுகளில் 25 ஆயிரம் பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன
தூத்துக்குடி:
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 10 தீவுகளில் 25 ஆயிரம் பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தீவுகள்
மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இதில் 2 தீவுகள் ஏற்கனவே கடலில் மூழ்கிவிட்டன. மேலும் தூத்துக்குடி பகுதியில் உள்ள வான்தீவு கடலில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டது. இதனை பாதுகாக்க வான்தீவு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு பனைமர விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. தூத்துக்குடி பகுதி வனச்சரக அலுவலர் ரகுவரன் முயற்சியால் வனத்துறை அலுவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், கடோலர கிராம சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்கள் மூலம் இந்த தீவில் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டன. வான் தீவு பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இந்த விதைகள் முளைத்து தற்போது ஒரு அடி முதல் 2 அடி வரை வளர்ந்து உள்ளன.
பனைமரம்
இதே போன்று தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவாரி தீவு, நல்லத்தண்ணி தீவுகளிலும் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ள 10 தீவுகளில் பனைமர விதைகளை நடவு செய்யும் பணி விரிவுபடுத்தப்பட்டது. சீசன் காலத்தின் பனைமர விதைகளை சேகரித்து படகுகள் மூலம் தீவு பகுதிகளுக்கு கொண்டு சென்று நடவு செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 10 தீவுகளிலும் சுமார் 25 ஆயிரம் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், தீவுகளில் பல்வேறு பாரம்பரிய மரங்களையும் நட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இதன் மூலம் கடல் அரிப்பை தடுத்து தீவுகள் மூழ்குவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பிரதமர் மோடி பாராட்டு
இந்த நிலையில், தீவுகளில் பனைமரங்கள் வளர்க்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திரமோடி, நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசி பாராட்டி உள்ளார். இதனால் வனத்துறையினர் மற்றும் கடலோர மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story