மண்ணில் புதைந்த விவசாயி, உயிருடன் மீட்பு


மண்ணில் புதைந்த விவசாயி, உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 28 Nov 2021 7:12 PM IST (Updated: 28 Nov 2021 7:12 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் மண்திட்டு சரிந்ததால் மண்ணில் புதைந்த விவசாயி, உயிருடன் மீட்கப்பட்டார்.

கோத்தகிரி

தொடர் மழையால் மண்திட்டு சரிந்ததால் மண்ணில் புதைந்த விவசாயி, உயிருடன் மீட்கப்பட்டார்.

விவசாயி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மண்சரிந்து விழுதல், மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. 

இது தவிர நீலகிரி மலைப்பிரதேசமாக உள்ளதால், குடியிருப்பு பகுதியில் மேடான பகுதியில் உள்ள மண்திட்டுகள் ஈரமாகி எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளன.  இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள பாண்டியன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் கோவிந்தராஜ்(வயது 29). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர்.

மண்திட்டு சரிந்தது

இதற்கிடையில் நேற்று காலையில் கோவிந்தராஜ் தனது வீட்டின் அருகே உள்ள தேயிலை தோட்டத்துக்கு இயற்கை உர மூட்டையை சுமந்து கொண்டு மண் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். 

அப்போது திடீரென சாலையோரத்தில் இருந்த மண்திட்டு சரிந்து அவர் மீது விழுந்தது. இதனால் அவர் 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். அவர் மீது மண் சரிந்து விழுந்து கிடந்தது. மேலும் உர மூட்டையும் அவரது மார்பில் இருந்தது.

சிகிச்சை

பாதி உடல் மண்ணுக்குள் புதைந்திருந்த நிலையில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.  அப்போது கோவிந்தராஜ் மண்ணில் புதைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் மண்ணை அகற்றி அவரை மீட்டனர். தொடர்ந்து கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story