வருசநாடு அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு


வருசநாடு அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2021 8:03 PM IST (Updated: 28 Nov 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


கடமலைக்குண்டு:

பழங்கால ஓவியங்கள்

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் ஆசிரியர் பணியோடு தொல்லியல் சார்ந்த பழமையான சான்றுகளை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார். இவர் வருசநாடு-முருக்கோடை இடையே வைகை ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள மலை குகையில் பழங்கால ஓவியங்களை கண்டுபிடித்துள்ளார். இந்த ஓவியங்கள் தொடர்பாக அவர் நேற்று கூறியதாவது:- 
ஆதிமனிதர்கள் தொடக்க காலத்தில் மிருகங்களிடமிருந்து தப்பித்து கொள்வதற்கும் மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து காத்து கொள்வதற்கும் குகைகள் மற்றும் பெரிய பாறைகளின் தாழ்வான பகுதிகளில் தங்கினர். அவர்களின் வாழ்நாளில் எதிர்கொண்ட நிகழ்வுகளையும் காட்சிகளையும் தங்கியிருந்த குகைகளின் சுவர்களில் ஓவியங்களாக தீட்டினர்.
இதுபோன்று வரையப்பட்ட ஓவியங்கள் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன் வழக்கிலிருந்த ஒரு வகையான எழுத்து முறையாகும்.

சிவப்பு-வெள்ளை நிறம்

தற்போது கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியம் பெருங்கற்காலத்தை சேர்ந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஓவியம் என கருதப்படுகிறது. இங்கு இயற்கையாக அமைந்த சிறிய பாறை குகையில் கிழக்கு பக்க சுவரில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியங்கள் கருஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. சிவப்பு நிற ஓவியங்களுக்கு மேல் வெள்ளை நிற ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது.
சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் காலத்தால் முற்பட்டவை என்பதால் உருவங்களை முழுமையாக அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. இருப்பினும் சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியத்தில் பெரிய மரத்தின் அருகே யானை ஒன்று பாதி உடலை மறைத்து தலைப்பகுதி மற்றும் முன்னங்கால்கள் தெரியும்படி நின்று பலாப்பழத்தை உண்ணும் காட்சியும், யானைக்கு முன்பகுதியில் முழு நீள்வட்ட வடிவத்தில் பெரியதும் சிறியதுமாக 2 பலாப்பழங்கள் வரையப்பட்டு உள்ளன. இது போன்ற ஓவியங்கள் தமிழகத்தில் வேறு எங்கும் கிடைத்ததாக தெரியவில்லை.

ஆய்வு செய்ய வேண்டும்

வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் கோடுகளால் வரையப்பட்ட மனித உருவங்களும் மீன்கள், மரப்பல்லி, உடும்பு, மான்கள், வேட்டையாடும் காட்சி, திரிசூலம், வட்டம், அரைவட்டம் போன்றவைகளும் காணக்கிடக்கின்றன. ஒரு ஓவியம் அழிந்த பின்னர் மற்றொரு ஓவியம் அதன் மேல் வரையப்பட்டுள்ளது. எனவே, இவை பல காலகட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் என்பதை உணரமுடிகிறது. இங்கு காணப்படுகின்ற ஓவியங்கள் மனிதன் வரைய தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் பெருங்கற்காலத்தை சேர்ந்த நெடுங்கற்கள், மண்பானை ஓடுகள் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே வைகை நதியை முக்கியத்துவப்படுத்தி கீழடி போன்ற இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு வரலாற்று சாட்சியங்களை வெளிக்கொணர்வது போல் மூலவைகை பகுதியிலும் தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து முக்கியத்துவபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story