கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக கணக்கெடுக்க வேண்டும்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக கணக்கெடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Nov 2021 10:02 PM IST (Updated: 28 Nov 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக கணக்கெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் நிர்வாகம் தொடர்பாகவும், வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிவாரணம் மற்றும் முன்னேச்சரிக்கை நடவடிக்கை  குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அனைத்து நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.

 மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு  உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, அந்த சேதங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மின்விபத்து

சேதங்களை கணக்கெடுக்கும் போது உயிரிழப்பு, வீடு சேதங்கள், விவசாய பயிர் சேதங்கள் என ஒவ்வொரு சேதங்களையும் முறையாக வகைப்படுத்தி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சேதங்களின் அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் மின்தடை, மின் விபத்து ஏற்படாத வகையில் பராமரிப்பு பணிகளை மின்சாரத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.  மழையால் சேதமடைந்த சாலைகள், தார்சாலைகளை கண்டறிந்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனுக்குடன் அதனை சரிசெய்திட வேண்டும். 

இனிவரும் காலங்களில் பருவமழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளின்போது சேதங்கள் ஏற்படாத வகையில் அனைத்து முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். கட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணன், சாய்வர்தினி, தனித்துணை ஆட்சியர் ராஜாமணி மற்றும் தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story