ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்


ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்
x
தினத்தந்தி 28 Nov 2021 10:05 PM IST (Updated: 28 Nov 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே தப்பி ஓடிய சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

சிக்கல்:
கீழ்வேளூர் அருகே தப்பி ஓடிய சாராய வியாபாரியை பிடிக்க ஆற்றில் குதித்த போலீஸ்காரர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
சாராயம் விற்பனை
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கோகூர் மாதா கோவில் பின்புறம் வெட்டாறு செல்கிறது. அங்கு உள்ள சுடுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நேற்று முன்தினம் மாலை கீழ்வேளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மோகன்தாஸ் (பயிற்சி), போலீஸ்காரர்கள் மாஸ்கோ(வயது32), வினோத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். 
அப்போது அங்கு திருக்கண்ணங்குடி, சின்னமுக்கால் வட்டம் பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி மகன் தனராஜ் (21) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிய தனராஜ், அந்த பகுதியில் உள்ள வெட்டாற்றில் குதித்துள்ளார். 
ஆற்றில் குதித்த போலீஸ்காரர்
இதை கண்ட போலீஸ்காரர் மாஸ்கோ, தனராஜை பிடிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். அப்போது கனமழையால் ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் போலீஸ்காரர் அடித்து செல்லப்பட்டு, முட்புதருக்குள் சிக்கி கொண்டார். இதை கண்ட மற்ற போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், கீழ்வேளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 
இதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  
உயிருடன் மீட்டனர்
மாலை 6 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி தேடினர். இரவு 8 மணி அளவில் ஆற்றுக்குள் இருந்த கருவேல மரக்கிளையை பிடித்து கொண்டு தத்தளித்த மாஸ்கோவை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக  நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை, போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நேரில் சென்று பார்த்தார்.  போலீசாரை பார்த்து தப்பியோடிய சாராய வியாபாரி தனராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story