வெள்ளத்தில் தத்தளிக்கும் நாகை
2-வது நாளாக விடிய, விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் நாகை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
2-வது நாளாக விடிய, விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் நாகை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டித்தீர்த்த கன மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மேலக்கோட்டை வாசல், பைக்கார மின்நிலையம், பெருமாள் தெற்குவீதி, அரசு ஆஸ்பத்திரி சாலை, நீலா தெற்கு வீதி, செல்லூர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன.
மேலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. ஒருசில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த தண்ணீரை வெளியேற்ற பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதனால் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டனர்.
தத்தளிக்கும் நாகை
சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. நடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதை விவசாயிகள் வெளியேற்றி பயிர்களுக்கு பூச்சி மருந்து, உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மீண்டும் மழை பெய்து பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நாகையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை 2-வது நாளாக விடிய, விடிய கொட்டித்தீர்த்து. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி நின்றது. தொடர் மழையால் நாகை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
இந்த மழையால் நாகை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், தலைஞாயிறு, திருக்குவளை, கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. மழைநீர் தேங்கியதால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாகை அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், நாகூர் பட்டினச்சேரி உள்ளிட்ட கடற்கரையோரங்களில் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
நெற்பயிர்கள் மூழ்கின
விசைப்படகுகள் பழைய மீன்பிடி துறைமுகம், புதிய மீன்பிடி துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தலங்களை தண்ணீர் சூழ்ந்ததால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 65 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார்.
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழையால் கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி கருணாவெளி கிராமத்தில் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் தேங்கி ஆறுபோல் காட்சி அளிக்கிறது. இதே போல் சிக்கல் அருகே பொன்வெளி கிராமத்தில் 300 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன.
Related Tags :
Next Story