கடலூர் அருகே மலட்டாற்றில் மூழ்கிய 2 மாணவர்கள் பிணமாக மீட்பு
கடலூர் அருகே மலட்டாற்றில் குளித்த 2 மாணவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் ராசாப்பாளையத்தை சேர்ந்தவர் சேகர் மகன் பாலாஜி (வயது 20). பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த முத்துவேல் மகன் அபினேஷ் (வயது 17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.
பாலாஜி, அபினேஷ் மற்றும் பிரவீன் உள்பட 4 பேர் அதே பகுதியில் உள்ள மலட்டாற்றுக்கு நேற்று முன்தினம் மதியம் குளிக்க சென்றனர். அங்கு குளித்து கொண்டிருந்த போது, திடீரென்று பாலாஜி மற்றும் அபினேஷ் ஆகியோரை காணவில்லை.
இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 15 பேர் நிலைய அலுவலர்கள் (கடலூர்) விஜயகுமார், (நெல்லிக்குப்பம்) சிவா ஆகியோர் தலைமையில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்தததால், தேடும் பணி நிறுத்தப்பட்டது.
பிணமாக மீட்பு
தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது 9 மணி அளவில் பாலாஜி, அபினேஷ் ஆகியோர் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆற்றின் உள்ளே இறங்கி குளித்த போது, அங்கிருந்த சேற்றில் சிக்கி அவர்கள் வெளியே வர முடியாமல் இறந்து இருப்பது தெரியவந்தது. மாணவர்கள் 2 பேரின் உடலையும் பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது, கல்நெஞ்சையும் கரைய செய்வதாக இருந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story