காட்பாடியில் கூடுதல் ரெயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு
காட்பாடியில் கூடுதல் ரெயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
காட்பாடி
காட்பாடியில் கூடுதல் ரெயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கூடுதல் ரெயில்வே மேம்பாலம்
காட்பாடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் வழியாகத் தான் ஆந்திராவுக்கு செல்ல முடியும். தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் கார், பஸ், லாரிகள், கன்டெய்னர்கள் போன்ற வாகனங்கள் இந்த மேம்பாலத்தை கடந்து செல்கின்றன. மேம்பாலத்தில் ஏதாவது ஒரு லாரி பழுதாகி நின்றால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விடுகிறது.
சித்தூருக்கு செல்ல இந்த ஒரு மேம்பாலம் தான் உள்ளது. மேம்பாலத்தின் மேற்பகுதியில் விரிசல், குழி, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக மேலும் ஒரு மேம்பாலத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் பாலமுருகன், கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் காட்பாடி ரெயில் நிலையத்தில் கூடுதல் மேம்பாலம் அமைப்பது குறித்து நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ரெயில்வே மேம்பாலத்தின் மேல் நின்று எவ்வாறு வாகனங்கள் செல்கின்றன என்றும், ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் கடக்கின்றன என்றும் கேட்டறிந்தனர். மேலும் ரெயில் நிலையத்தின் உள்பகுதியிலும் சென்று ஆய்வு செய்தனர்.
வேலூர் வெங்கடேஸ்வரா தகவல் மையம் அருகே பாலம் அமைப்பது குறித்தும், நெல்வாய் கிராமத்தில் இருந்து கே.வி.குப்பம் வரை அமைக்கப்பட உள்ள புறவழிச்சாலை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது வேலூர் கோட்ட பொறியாளர் பழனிச்சாமி, சென்னை கோட்ட பொறியாளர் இளங்கோ, உதவி கோட்ட பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் யோகராஜ், பார்த்திபன், பூபாலன், இளநிலை பொறியாளர் மதனமுசாபர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story