சேது எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது மரம் முறிந்து விழுந்தது
ராமேசுவரம் நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது மரம் முறிந்து விழுந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
பனைக்குளம்,
ராமேசுவரம் நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது மரம் முறிந்து விழுந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
ரெயில் என்ஜின் மீது மரம் விழுந்தது
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை ராமேசுவரம் நோக்கி சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் ராமநாதபுரத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.
ரெயில் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை- பெருங்குளம் இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது உச்சிப்புளி அருகே தண்டவாளம் பக்கத்தில் இருந்த பெரிய புளியமரம் பலத்த காற்றில் முறிந்து ரெயில் என்ஜின் மீது விழுந்தது.
பயணிகள் தப்பினர்
உடனே என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக வேகத்தை குறைத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மரம் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக என்ஜின் டிரைவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
என்ஜினின் ஒரு பகுதி மட்டும் சேதம் அடைந்தது. அதை தொடர்ந்து ரெயில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெருங்குளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
2 மணி நேரம் தாமதம்
இதை தொடர்ந்து ரயில் என்ஜின் மீது விழுந்து கிடந்த மரத்தை ரெயில்வே ஊழியர்கள் வெட்டி அகற்றினார்கள். இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டது. அந்த மாற்று என்ஜின் பொருத்தப்பட்டது. அதன்பின்னர் சேது எக்ஸ்பிரஸ் ரயில் உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு வந்தடைந்தது.
Related Tags :
Next Story