கறம்பக்குடியில் திருடர்களிடமிருந்து மீட்கப்பட்ட 32 ஆடுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு போலீசாருக்கு பெண்கள் கண்ணீர் மல்க நன்றி கூறினர்
கறம்பக்குடியில் ஆடு திருடர்களிடமிருந்து மீட்கப்பட்ட 32 ஆடுகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆடுகளை பெற்று கொண்ட பெண்கள் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர்.
கறம்பக்குடி:
32 ஆடுகள் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, கீரமங்கலம், வடகாடு, ஆலங்குடி, மழையூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் ஆடு திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் தனிபடை போலீசார் நடத்திய சோதனையில் கந்தர்வகோட்டை தாலுகா நெப்புகை கிராமத்தை சேர்ந்த அழகப்பன், வேளாங்கண்ணியை சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் கறம்பக்குடி பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 32 ஆடுகள் மீட்கபட்டது.
ஒப்படைப்பு
இதைதொடர்ந்து மீட்கப்பட்ட ஆடுகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனிசாமி, சப் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் ஆட்டின் உரிமையாளர்கள் கறம்பக்குடி, வடகாடு, மழையூர் மற்றும் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த 12 பேரிடம், மீட்கப்பட்ட 32 ஆடுகளை ஒப்படைத்தனர்.
அவற்றை பெற்றுக்கொண்ட பெண்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
நடவடிக்கை
இதுகுறித்து ஆட்டை பெற்றுக்கொண்ட பெண் விவசாயி கூறுகையில், இயற்கை இடர்பாடுகளால் விவசாயம் பொய்த்து போகும் நிலையில் ஆடு, மாடு வளர்ப்பு மட்டுமே கிராம பகுதி மக்களுக்கு கை கொடுக்கின்றன. நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களிடையே கால்நடைகளை வளர்கிறோம். ஆனால் ஒரே இரவில் ஆடுகளை திருடர்கள் தூக்கி சென்று விடுகின்றனர்.
மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகள் திருடப்பட்டு உள்ளது. ஆடுகளை பறிகொடுத்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எனவே போலீசார் இதுபோல் தொடர் சோதனை நடத்தி திருடப்பட்ட அனைத்து ஆடுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
வடகாடு
இதேபோல் வடகாடு போலீஸ் நிலையத்தில் திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 9 ஆடுகளை ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் உரியவர்களிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story