‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Nov 2021 10:51 PM IST (Updated: 28 Nov 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்: 

வடிகால் வசதி வேண்டும் 
திண்டுக்கல்லை அடுத்த மல்லையகவுண்டன்பட்டி பகுதியில் மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த மழையால் தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இந்த கிராமத்தில் முறையாக செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ்குமார், மல்லையகவுண்டன்பட்டி.

எச்சரிக்கை பலகை வைக்கப்படுமா?
ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை அரசு மருத்துவமனைக்கு முன்பு உள்ள சாலையில் சில இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதுதொடர்பான எச்சரிக்கை பலகை அங்கு வைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பதை கவனிக்காமல் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே எச்சரிக்கை பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமு, செம்பட்டி.

குடிநீர் குழாய் இணைப்பு தேவை
திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சி கொட்டப்பட்டி பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புகள் முறையாக கொடுக்கவில்லை. இணைப்பு கொடுக்கப்பட்ட வீடுகளுக்கும் பழைய குழாய்களே பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாய் இணைப்பை முறையாக கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிசித்தார்த், கொட்டப்பட்டி.

தரைப்பாலம் அமைக்க வேண்டும் 
நத்தம் தாலுகா இடையபட்டியில் உள்ள வாய்க்காலில் மழைக்காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இடையபட்டியில் இருந்து பட்டணம்பட்டி செல்லும் தார்சாலை சேதமடைந்தது. மேலும் மண் அரிப்பு காரணமாக சாலையும் துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் தரைப்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும்.
-கார்த்திக், இடையபட்டி.
சாலை வசதி செய்யப்படுமா?
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து ஊராட்சி வாழைக்காய்பட்டி பிரிவு அருகே அன்னாபுரம், சமாதானநகர் ஆகிய பகுதிகளில் சாலை வசதி செய்யப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹிப்ளின், அன்னாபுரம்.

நடைபயிற்சி பூங்காவை திறக்க வேண்டும்
திண்டுக்கல், நத்தம் சாலையில் பர்மா காலனியில் முத்துசாமி மழைநீர் சேகரிப்பு குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி நடைபயிற்சி செய்யும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதனுள் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. அந்த பகுதிகயை சேர்ந்த பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், பொழுதுபோக்குவதற்கும் இந்த பூங்காவை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக இந்த பூங்கா பூட்டப்பட்டு கிடக்கிறது. மேலும் பூங்கா வளாகத்தில் புதர்மண்டி உள்ளது. எனவே பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபிநயா, திண்டுக்கல்

Next Story