காரைக்காலில் 5 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது
காரைக்காலில் 24 மணிநேரம் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 5 ஆயிரம் ஹெக்டேரில் பயிர் செய்துள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
காரைக்கால், நவ.
காரைக்காலில் 24 மணிநேரம் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 5 ஆயிரம் ஹெக்டேரில் பயிர் செய்துள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
8 செ.மீ. மழை
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்கால் மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் விடிய விடிய கொட்டிய மழை நேற்று மாலை வரை நீடித்தது.
அதாவது நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை 24 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை காரைக்காலில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நெற்பயிர்கள் மூழ்கின
இந்த அடைமழை காரணமாக மாவட்டத்தில் திருநள்ளாறு, நெடுங்காடு, அம்பகரத்தூர், சேத்தூர், கோட்டுச்சேரி, திரு-பட்டினம், நிரவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் தண்ணீர் வடிய வைக்க முடியால் மக்கள் தவித்தனர்.
காரைக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்யும் கனமழையானது காரைக்காலின் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, நண்டலாறு உள்ளிட்ட பிரதான ஆறுகள் கலக்கிறது. ஆறுகளில் வெள்ளம் கரையை தொட்டபடி பாய்ந்தோடுகிறது. தொடர் மழையால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா உத்தரவின்பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநள்ளாறு அடுத்த தென்னங்குடி, நெடுங்காடு உள்ளிட்ட கிராமங்களில் மழையினால் 30-க்கு மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளது. மழையில் கால்நடைகள் இறந்தால் நிவாரணம் வழங்குவதுபோல், கோழிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story