கோட்டைப்பட்டினத்தில் கடலில் மீனவர் மாயம்: 7 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரத்தில் சடலமாக மீட்பு


கோட்டைப்பட்டினத்தில்  கடலில் மீனவர் மாயம்: 7 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரத்தில் சடலமாக மீட்பு
x
தினத்தந்தி 28 Nov 2021 5:30 PM GMT (Updated: 28 Nov 2021 5:30 PM GMT)

கோட்டைப்பட்டினத்தில் கடலில் மாயமான மீனவர் 7 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரத்தில் கடலில் சடலமாக மீட்கப்பட்டார்.

கோட்டைப்பட்டினம்:
படகு கவிழ்ந்து மீனவர் மாயம்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த 22-ந்தேதி நாட்டுப்படகு மூலம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த கணேஷ் மற்றும் மணிமுத்து ஆகிய இருவரும் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது கடலில் பலத்த காற்று வீசியதால் படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் சென்ற இரண்டு பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். 
இந்நிலையில் கணேஷ் மட்டும் படகை பிடித்துக்கொண்டு இருந்தார். உடனே அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கணேஷ் என்பவரை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் காணாமல் போன மணிமுத்துவை மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் தேடிவந்தனர். காணாமல் போன மீனவரை தொடர்ந்து 7 நாட்கள் தேடி வந்தனர். 
சடலமாக மீட்பு
இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம், ஆற்றங்கரை என்ற ஊரில் கரை ஓரமாக ஒரு ஆண் சடலம் ஒதுங்கி உள்ளது என்று மண்டபம் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்று உடலை கைப்பற்றினர். பின்னர் இதுகுறித்து கோட்டைப்பட்டினம் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மணிமுத்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு சென்றனர். 
அப்போது மணிமுத்து உடலை அவரது உறவினர்களிடம் காண்பித்தனர். அவர்கள் உடலை பார்த்து அந்த உடல் மணிமுத்து தான் என்பதை அடையாளம் காட்டினர். இதனையடுத்து மண்டபம் கடலோர காவல் குழுமத்தினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து மணிமுத்து உடலை புதுக்கோட்டை மீன் வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன், கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 7 நாட்களுக்கு முன்பு கடலில் தவறி விழுந்து காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story