‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 28 Nov 2021 11:00 PM IST (Updated: 28 Nov 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அறுந்து விழும் நிலையில் மின்கம்பிகள்

 நாகை மாவட்டம் திருப்பூண்டி ஊராட்சியில் உள்ள காரைநகர் கிராமம் கீழத்தெருவில் மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் உள்ளன. தொடர் மழையினால் மின்கம்பிகள் முழுவதும் அறுந்து விடும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த பகுதியில் மின்பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பகத்சிங், நாகை.

விஷப்பூச்சிகளால் மக்கள் அச்சம்

நாகை மாவட்டம் வடக்கு பால்பண்ணைசேரி பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து கொள்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கனமழையின் போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. மேலும், மழைநீருடன் விஷப்பூச்சிகளும் வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி வடக்கு பால்பண்ணைசேரி பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.       
-சங்கர், நாகை.

வடிகால் தூர்வாரப்படுமா?

 திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த மகாராஜபுரம் பகுதி அண்ணாநகரில் உள்ள வடிகாலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் அண்ணாநகரில் உள்ள குளம் நிரம்பும் தருவாயில் உள்ளது. குளம் நிரம்பினால் தண்ணீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் மற்றும் குளத்தின் நீர் வழிந்தோட வசதியாக வடிகாலை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-இளஞ்செழியன், மாகாராஜபுரம்.

வடிகால் வசதி வேண்டும்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த இடையூர் புதுத்தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வழிந்தோட வழியின்றி தெருவில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தேங்கி கிடக்கும் மழைநீரில் நடந்து சென்று வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாலா, இடையூர்.

Next Story