உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு;போக்குவரத்து துண்டிப்பு


உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு;போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2021 11:05 PM IST (Updated: 28 Nov 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மானாமதுரை,
மானாமதுரை அருகே உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
துண்டிப்பு
மழையால் மானாமதுரை அருகே உப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கள்ளர்குளம் தரைப்பாலம் மூழ்கியது.  இதனால் செய்களத்தூர் அணைக்கட்டில் இருந்து கள்ளர்குளம், காளிகாடு, சோழங்குளம், முத்தரசன், குடைஞ்சாடி, கோடாங்கிபட்டி, மாங்குடி, வானகருப்பு, காயங்குளம், உருளி பெரியகோட்டை இடைகாட்டூர், தெற்குர், செட்டிகுளம், சீரம்பட்டி, உள்பட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்களத்தூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கண்மாய் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஏராளமான கண்மாய்கள் நிரம்பி உபரி நீர் அதிக அளவில் உப்பாற்றில் வெள்ளமாக வந்து கொண்டுள்ளது. இந்த உபரி நீர் பெரிய கோட்டை அருகே உள்ள தடுப்பணை மூலம் வைகை ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
 செய்களத்தூர் கண்மாய்க்கு செல்லும் கால்வாயை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குச் செல்லும் வெள்ள நீர், செய்களத்தூர் கண்மாய்க்கு செல்வதால் செய்களத்தூர் பெரிய கண்மாய் ஏற்கனவே நிறைந்து மறுகால் பாய்கின்ற நிலையில் மேலும் தண்ணீர் வருவதால் கண்மாய் உடைந்து செய்களத்தூர், கள்ளர் வலசை உள்ளிட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
பயிர்கள் மூழ்கின
மேலும் கள்ளர்குளம் கால்வாயை ஒட்டியுள்ள வயல் வெளிகளில் உபரிநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், உப்பாற்றில் பொதுப் பணித்துறையினர் சரியான முறையில் தூர்வாராததால் கருவேல மரங்கள் வளர்ந்து நீர் வரத்தை தடுப்பதால் உபரி நீர் அருகில் உள்ள கால்வாய்களை உடைத்துக் கொண்டு செல்வதால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்று கூறினர்.

Next Story