மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப சாவு


மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 29 Nov 2021 12:49 AM IST (Updated: 29 Nov 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே காட்டு பன்றிகளை கொல்ல வைத்திருந்த மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே காட்டு பன்றிகளை கொல்ல வைத்திருந்த மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். 

கல்லூரி மாணவர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் கருப்பசாமி (வயது 19). கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு தீவனம் பறிக்க கருப்பசாமி தோட்டத்திற்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் தோட்டத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் தேடிச் சென்றபோது தோட்டத்தில் மின்வேலி அருகே கருப்பசாமி மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கருப்பசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முற்றுகை போராட்டம்

 இதையடுத்து அவரது உறவினர்கள் திடீரென்று ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மக்காச்சோளம் பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக மின்சார வயர் மூலம் மின் வேலி அமைத்துள்ளதாகவும், தோட்டத்துக்கு சென்ற கருப்பாசாமி மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். எனவே சம்பந்தப்பட்ட விவசாயியை கைது செய்ய வேண்டும். அதன்பிறகு தான் கல்லூரி மாணவர் உடலை மருத்துவப்பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருமங்கலம் துணை சூப்பிரண்டு சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story