புகார்பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாக்கடை கால்வாயில் அடைப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா சுக்கிரவாரப்பட்டியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
கல்வராஜ், சுக்கிரவாரப்பட்டி.
தேங்கி நிற்கும் மழைநீர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை அக்ரஹாரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே வீடுகளின் முன்பு தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடாக உள்ளது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் உடனடியாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.
ஜெயரூபன், தென்கரை.
சாலையில் மாடுகள்
மதுரை மாநகராட்சிக்கு கே.புதூருக்கு உட்பட்ட டி.ஆர்.ஓ. காலனி முதல் மண்மலைமேடு வரை மாடுகள் சாலைகளில் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதன் காரணமாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
முருகன், மதுரை.
குடிநீர் தட்டுப்பாடு
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் ரெகுநாதமடை பஞ்சாயத்து செம்பொன்நெறிஞ்சி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மணிகண்டன், செம்பொன்நெறிஞ்சி.
எரியாத தெருவிளக்குகள்
மதுரை எல்லீஸ் நகர் மாநகராட்சி பூங்கா எதிரே உள்ள பகுதிகளில் தெருவிளக்கள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பெண்களும், சிறுவர், சிறுமிகளும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். அடிக்கடி திருட்டு சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், மதுரை.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கல்லல் ஊராட்சி புரண்டியில் அணிக்குண்டு ஊருணி அருவாணி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, உடனடியாக வாய்க்காலை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
சுவாமிநாதன், புரண்டி.
கொசுத்தொல்லை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாவன்னா நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுத்தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
முத்துராமலிங்கம், தேவகோட்டை.
நாய்கள் அட்டகாசம்
மதுரை மாநகராட்சி சத்தியசாயி நகரில் நாளுக்கு நாள் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெருவில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, நாய்களை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், மதுரை.
Related Tags :
Next Story