நீர்நிலைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது


நீர்நிலைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 29 Nov 2021 1:36 AM IST (Updated: 29 Nov 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை காரணமாக நீர்நிலைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்:

நீர்நிலைகள் நிரம்பின
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழையால் ஏற்கனவே வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள விசுவக்குடி நீர்த்தேக்கம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை நீர்த்தேக்கம் ஆகியவை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. மாவட்டத்தில் உள்ள அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மலைப்பகுதிகளில் சில இடங்களில் புதிதாக அருவி ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், 62 ஏரிகள் நிரம்பிய நிலையில், தற்போது செங்குணம், திருவாளந்துறை கீழப்புளியூர் ஆகிய 3 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன. இதனால் மாவட்டத்தில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆபத்தை உணராமல்...
பெரம்பலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் விசுவக்குடி, கொட்டரை ஆகிய நீர்த்தேக்கங்களுக்கு பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் படையெடுத்து சென்று, இயற்கையின் அழகை கண்டு ரசித்தனர். அருவிகளுக்கு பலர் சென்று ஆனந்த குளியல் போட்டனர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு நிறைய ஏரிகள் நிரம்பியுள்ளதால், அதனை வேடிக்கை பார்க்கவும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அவர்கள் நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். அதில் சிலர் ஏரியில் உற்சாகமாக குளியல் போட்டும் மகிழ்கின்றனர். சிலர் வலை விரித்தும், தூண்டில் போட்டும் மீன் பிடித்து செல்கின்றனர்.

Next Story