திருச்சியில் 500 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அவதி
திருச்சியில் சுமார் 500 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
திருச்சி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருச்சி உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே மழை பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. தொடர் மழையால் திருச்சி மாநகரில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகள் மழைநீரில் தத்தளித்து வருகிறது.
திருவெறும்பூர், கருமண்டபம், ஜே.கே.நகர் உள்பட பல பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். பல நாட்களாக மழைநீர் வடியாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பெரும்பாலான சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு, குண்டும், குழியுமாக மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் திருச்சி கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புத்தூர் ஆறுகண் பாலத்தில் மழைநீர் கரையை தொட்டு சீறிப்பாய்ந்து செல்கிறது. புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாநகர பகுதிகளான உறையூர் செல்வ நகர், லிங்கம் நகர், பாத்திமா நகர், ராஜலெட்சுமி நகர், மேலபாண்டமங்கலம் உள்பட அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
மேலும், அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வீடுகளுக்குள் முடங்கி கிடந்த பொதுமக்களை தீயணைப்புதுறையினர் பரிசல்கள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர். மேலும், தன்னார்வ அமைப்பினர், அரசியல் கட்சியினர் பரிசல்களில் சென்று வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தவர்களுக்கு உணவு பொட்டலங்களையும் வழங்கினார்கள்.
வாகன போக்குவரத்து நிறுத்தம்
இதற்கிடையே மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வரும் அரியாற்றில் புங்கனூர் அருகே கரையில் உடைப்பு ஏற்பட்டதால் வயல்களில் தண்ணீர் புகுந்து இனியானூர், நாச்சிக்குறிச்சி, தீரன்நகர் வழியாக திருச்சி-திண்டுக்கல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும். அதிகஅளவு தண்ணீர் வரத்து காரணமாக திருச்சி-திண்டுக்கல் சாலையில் சுமார் 2 கி.மீ.தொலைவுக்கு தண்ணீர் ஆறாக ஓடியது.
இதன் காரணமாக திருச்சி-திண்டுக்கல் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போக்குவரத்து போலீசார் அங்கு சென்று வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். சாலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு, மற்றொருபுறமாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு பணி மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மணப்பாறையில் இருந்து வந்த தண்ணீர் தற்போது திருச்சி-திண்டுக்கல் சாலையில் பெருக்கெடுத்து செல்கிறது. இனி வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
Related Tags :
Next Story