தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குளத்தை தூர்வார வேண்டும்
பாகோடு பேரூராட்சிக்குட்பட்ட சீனிவிளையில் சாலையோரத்தில் குறுக்கோட்டு குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதிைய சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், பல ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாமல் செடி,கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி, கரையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வின்சென்ட், சீனிவிளை.
ஓடை சீரமைக்கப்படுமா?
ராஜாக்கமங்கலத்தில் இருந்து இரணியல் செல்லும் சாலையில் காக்காத்தோப்பு உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் ஓடை பராமரிக்கப்படாததால் மழைநீர் தேங்கி சாலையின் மறுபக்கம் பாய்கிறது. இதனால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். சாலையும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஏ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.
சாலையில் மரண பள்ளம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் இருந்து வாட்டர் டேங்க் சாலைக்கு செல்லும் திருப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம், நாகர்கோவில்.
மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?
தெங்கம்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட வைராவிளை பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.7 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால், இதுவரை அந்த நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி நீர்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.தியாகு, வைராவிளை.
Related Tags :
Next Story