14 வீடுகளில் கொள்ளை முயற்சி
சிறுகனூர் அருகே உள்ள மணியாங்குறிச்சியில் அடுத்தடுத்து 14 வீடுகளில் மர்ம நபர்கள் நேற்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
சமயபுரம்
சிறுகனூர் அருகே உள்ள மணியாங்குறிச்சியில் ரெட்டியார் தெரு, மூப்பனார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டனர். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து பார்த்துள்ளனர். இவ்வாறு 14 வீடுகளுக்குள் அடுத்தடுத்து சென்ற மர்ம நபர்கள் நகை, பணம் எதுவும் சிக்காததால் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரெட்டியார் தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ் (வயது 68), மூப்பனார் தெருவைச் சேர்ந்த செல்வநாயகம் (66) ஆகியோர் நேற்று சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அடுத்தடுத்து கொள்ளை முயற்சி நடந்த வீடுகளின் உரிமையாளர்கள் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
Related Tags :
Next Story